ஆங்கில நாவல்கள் - தமிழில்

நண்பர்களே!

ஆங்கில புத்தகங்களைப் பற்றி வெறும் விமர்சனங்கள் மற்றும் விளக்கங்கள் மட்டும் சொல்வதை விட எனக்கு பிடித்த / நான் படித்த ஆங்கில கதைகளை, ஆங்கிலம் படிக்க முடியாத தமிழ் நண்பர்களும் படிக்கும்படி பகிர்ந்துக் கொள்வது தான் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் Sci-Fi எனப்படும் அறிவியல் புதினங்களும் Fantasy என்று அழைக்கப்படும் மாயாஜால புதினங்களும் தான். அதிலும் Isaac Asimov, Robin Cook, Michael Crichton போன்றோரின் எல்லா நாவல்களும் படித்து விட்டேன். (ஐசாக் அஸிமோவின் எல்லா நாவல்களையும் படிப்பதென்பது கடினம். ஆகவே, சொல்லிக்கொள்ளும்படி படித்து விட்டேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்).

இது போன்ற நாவல்களைப் படிக்கும் போது, தமிழில் ஏன் இது போன்ற நாவல்கள் வருவதில்லை என்று எண்ணி மிகவும் ஆதங்கப்படுவேன். சுஜாதா, ஆர்னிகா நாசர் போன்றோரை விட்டு விட்டால், தமிழில் அறிவியல் புதினங்கள் எழுத ஆட்களே இல்லை. சுஜாதா போன்ற ஜாம்பவான்கள் கூட ஆங்கில நாவலாசிரியர்கள் போன்று விலாவரியாக அனைத்தையும் ஆராய்ச்சி செய்து எழுதியதில்லை. (இந்த கேள்வியை சுஜாதா அவர்களிடமே - ஒரு போஸ்ட் கார்டில் - கேட்டேன். பதில் தான் வரவில்லை)

சுஜாதாவின் திசை கண்டேன் வான் கண்டேன், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்றவகளை இங்கு குறிப்பிடலாம். ஆங்கில நாவல்களில் உள்ள ஆழம் இல்லையென்றாலும், இவைகள் வித்தியாசமான சிந்தனைகள் என்பதை மறுப்பதற்கில்லை.

தமிழ் சினிமாவில் கூட Avatar, Lord Of The Rings, Terminator 2 போன்ற படங்கள் வருவதில்லை. (எந்திரன்? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. ஆனால் உங்கள் மனசாட்சிக்கு உண்மையாக சொல்லுங்கள்.. எந்திரனை ஆங்கில படங்களுடன் ஒப்பிட முடியுமா?).

ஆகவே, இந்த இடைவெளியை நிரப்ப என்னால் புதிதாக எழுத முடியாதென்பதால், அதே ஆங்கில நாவல்களையே தமிழில் மொழிப்பெயர்த்தால் என்ன? என்று எண்ணி துணிந்து இறங்கி விட்டேன். ஓலை சுவடியும் எழுத்தாணியும் வைத்துள்ள தாடி புலவரே கூறியுள்ளார் - “எண்ணி துணிக கருமம் துனிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு”

நான் முன்பே கூறிய படி மயாஜாலங்கள் நிறைந்த “ஃபேண்டசி” வகை கதைகள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதையே தமிழில் மொழிப்பெயர்க்கலாம் என்று எண்ணியுள்ளேன். இந்த பணி மிகவும் கடினமான பணிதான் என்பதும் நீீண்ட காலம் எடுக்கக் கூடிய பணி என்பதும் எனக்கு தெரியும். இருந்தாலும் இது போன்ற கதைகள் தமிழில் வருவதில்லையே என்று ஆதங்கப்படும் சராசரி வாசகனாக நானும் இருப்பதால், ஒரு ஆரம்பமாக இருக்கட்டும் என்று தான் இதை செய்யப் போகிறேன்.

எப்போது ஹாரி பாட்டர் நாவல்கள் படிக்க ஆரம்பித்தேனோ அப்போதிருந்தே எனக்குள் உள்ள ஆதங்கம் என்னவென்றால், இந்த புத்தகங்களை யாராவது தமிழில் மொழிப்பெயர்க்க மாட்டார்களா என்பது தான். இது வரை யாரும் முயற்சி செய்தது போல் தெரியவில்லை. ஆகவே நானே அதனை செய்து விடலாம் என்று எண்ணியே ஆரம்பம் செய்கிறேன். முதல் அத்தியாயத்தை தயார் செய்து வருகிறேன். இன்றோ நாளையோ இணையத்தில் ஏற்றிவிடுவேன். உங்கள் அனைவரின் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நீடுஜாரிஸ்

4 கருத்துகள்:

 1. உங்கள் முயற்சிக்கு நன்றி.
  என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்...........!!!

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் நண்பரே எனக்கும் உங்களை போன்ற ஏக்கமும் ஆதங்கமும் இருந்து வருகிறது. யாராவது இதை மொழி பெயர்க்க மாட்டார்களா என ஏங்கும் என்னை போன்றவர்கள் மத்தியில் உங்களை போன்று அந்த பணியை நானே செய்கிறேன் என்பதை பார்க்க பெருமையாக உள்ளது. நான் நினைத்தாலும் அந்த அளவுக்கு எழுத்தாற்றல், வார்த்தை கோர்வை, கதை கூறும் தன்மை போன்றவை என்னிடம் இல்லை. ஆனால் எழுதியவர்களையும், எழுத நினைபவர்களையும் வரவேற்கும் ஆவல் இருக்கிறது. உங்கள் பணியை விரைவில் சிறப்பாக முடியுங்கள் அதற்காக நான் மட்டுமல்ல என் தோழிகளும் காத்திருகிறார்கள். நன்றி!

  பதிலளிநீக்கு
 3. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 4. தமிழில் மொழிபெயர்த்தாலும் யாரும் வாங்கப்போவதில்லை என்பதால்தான் யாரும் மொழிபெயர்ப்பதில்லை. மூல நூல் வாசிப்பே சிலரிடம்தான் உள்ளது. மொழிபெயர்ப்பு நாவல்கள் தமிழில் புறக்கணிக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை. என்றாலும் நானும் invitation to the game மொழிபெயர்த்து வருகிறேன். என் ப்ளாக்கிலும் ஒரு நாள் வரலாம். தங்கள் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியதுதான். ஒரு மொழி வளம் பெறுவது மொழிபெயர்ப்புகளால்தான்.வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு