ஹாரி பாட்டரும் மந்திர கல்லும் - அத்தியாயம் 1



முதல் அத்தியாயம் 

உயிர் பிழைத்த சிறுவன்

ப்ரைவேட் டிரைவ் எண்: நான்கை சேர்ந்த திரு மற்றும் திருமதி டர்ஸிலீக்கள் தங்களை சாதரணமானவர்கள் என்று கூறிக்கொள்வதில் மிகவும் பெருமையடைபவர்கள். வித்தியாசம், மர்மம் போன்றவற்றில் ஈடுபடுபவர்களில் கடைசி நபர்களாகக் கூட இவர்களை நீங்கள் பார்க்க முடியாது. காரணம், அது போன்ற மூளையில்லாத விஷயங்களில் எல்லாம் அவர்கள் தலையிடுவதில்லை. மிக்க நன்றி!


திரு.வெர்னன் டர்ஸிலீ "க்ரன்னிங்ஸ்" எனும் டிரில்கள் தயாரிக்கும் கம்பெனியின் இயக்குனராக இருக்கிறார். அவர், கழுத்தே இல்லை என்று சொல்லும் அளவுக்கு குண்டான மனிதர். ஆனால், மிகப் பெரிய மீசை உண்டு. திருமதி பெடூனியா டர்ஸிலீ ஒல்லியான பொன்னிற கூந்தல் கொண்ட பெண்மனி. ஆனால், சராசரியை விட நீளமான கழுத்தைக் கொண்டவர். அதுவே தோட்டச் சுவரை அடிக்கடித் தாண்டி அடுத்த வீட்டாரின் விஷயங்களை எட்டிப் பார்ப்பதற்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் டட்லி என்று ஒரு மகன் உண்டு. இவர்களின் பார்வையில் அவனை விட சிறந்த ஒரு சிறுவன் உலகிலேயே கிடையாது.


டர்ஸிலீ குடும்பத்தினருக்கு எல்லா வளங்களும் இருக்கிறது. அதுபோல் ஒரு ரகசியமும் அவர்களிடம் உள்ளது. அதனை யாராவது கண்டுபிடித்து விடுவார்களோ என்று அனுதினமும் கவலை படுபவர்களாகவும் அவர்கள் இருந்தனர். பாட்டர் குடும்பத்தினருடன் இவர்களுக்குண்டான உறவை பற்றி யாராவது தெரிந்துக் கொண்டு விட்டால் இவர்களால் தாங்கவே முடியாது. திருமதி டர்ஸிலீ - திருமதி பாட்டர் இருவரும் அக்காள் - தங்கைகள். ஆனால் பல வருடங்களாக சந்தித்திக்கொள்ளவே இல்லை. இன்னும் சொல்லப் போனால், திருமதி டர்ஸிலீ தனக்கு ஒரு தங்கை இருப்பதாக வெளியில் காட்டிக் கொள்வதேயில்லை. திருமதி பாட்டரும் அவரது ஒன்றுக்கும் உதவாத கணவரும் அவ்வளவுக்கு அவ்வளவு டர்ஸிலீக்களுக்கு மாற்றமானவர்கள். அவர்கள் இந்த தெருவிற்கு வந்தால் அக்கம்பக்கத்தார்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து பார்த்தாலே டர்ஸிலீக்களுக்கு உடல் முழுவதும் நடுங்கும். பாட்டர் தம்பதியினருக்கும் ஒரு மகன் இருக்கிறான். டர்ஸிலீக்கள் அக்குழந்தையை பார்க்கவே இல்லையென்றாலும், அக்குழந்தையும் தங்களின் டட்லியும் கலந்து பழகிவிட கூடாதென்பதும் இவர்கள் தள்ளியே இருப்பதற்கு ஒரு காரணமாகும்.


நம் கதை ஆரம்பிக்கும் ஒரு சாதரணமான செவ்வாய் கிழமை காலையில் டர்ஸிலீ தம்பதியினர் எழுந்திருக்கும் போது அன்றைய தினம் நாடு முழுவதும் வித்தியாசமான, மர்மமான காரியங்கள் நடக்கப்போவதை அறிவுறுத்தும்படி ஏதும் சம்பவங்கள் நடைபெறவில்லை. ஹம்மிங் செய்துக் கொண்டே மிக மிக சாதாரணமான ஒரு 'டை'யை அணிந்து அலுவலகம் போக தயாராகிக் கொண்டிருந்த திரு. டர்ஸிலீயோ, கூப்பாடுப் போட்டுக் கொண்டிருக்கும் தனது மகனை ஊர் வம்புகளைப் பேசிக்கொண்டே சேரில் உட்கார வைக்க முயற்சித்துக் கொண்டிருந்த திருமதி. டர்ஸிலீயோ தங்கள் வீட்டு ஜன்னலை தாண்டி பறந்து சென்ற பழுப்பு மஞ்சள் நிற ஆந்தையை கவனிக்கவில்லை.


எட்டரை மணியளவில் தனது அலுவலக கைப்பையை எடுத்துக் கொண்டு, தனது மனைவிக்கு ஒரு முத்ததைக் கொடுத்து, மகனுக்கும் ஒன்று கொடுக்க முயற்சித்து முடியாமல் - டட்லி இப்போது காரணம் தெரியாத வெறியில் தனது உணவை சுவற்றில் வீசிக் கொண்டிருந்தான் - "சின்ன ராஸ்கல்" என்று செல்லமாக திட்டிக்கொண்டே வெளியே வந்து காரை எடுத்த திரு. டர்ஸிலீக்கு தெரு முனையைத்தாண்டும் போது தான் வித்தியாசமான காட்சி ஒன்று கன்ணில் பட்டது. ஒரு பூனை வரைபடத்தைப் படித்துக் கொண்டிருந்தது. ஒரு கணம் திரு. டர்ஸிலீக்கு தான் பார்த்தது மூளையில் பதியவில்லை. பதிந்த போது அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தார். வரிப்பூனை ஒன்று பிரைவேட் டிரைவ் தெரு முனையில் நின்றுக் கொண்டிருந்தது. வரைபடம் ஏதும் அருகில் காணப்படவில்லை. ஒளி வெளிச்சத்தில் ஏதும் வேடிக்கையாக தோன்றி இருக்க வேண்டும் என நினைத்து கொண்டு அந்த பூனையை உற்றுப் பார்த்தார். அதுவும் அவரை உற்றுப் பார்த்தது. தெரு முனைத் திரும்பும்போது கார் கண்ணாடி வழியாக அந்த பூனையை மறுபடியும் பார்த்தார். பூனை தெருப்பெயர் பலகையைப் படித்துக் கொண்டிருந்தது. இல்லை இல்லை. தெருப்பெயர் பலகையைப் பார்த்துக் கொண்டிருந்தது. பூனைகளால் வரைபடத்தையோ, தெருப்பெயர் பலகையையோ படிக்க முடியாது. முக்கிய சாலையை அடையும் போது திரு டர்ஸிலீ இன்று கிடைக்க்ப் போகும் பெரிய ஆர்டரைப் பற்றிய மட்டுமே நினைத்து பார்க்க வேண்டுல் என எண்னிக் கொண்டார்.


ஆனால், ஊர் எல்லையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சீட்டி அடித்து கொண்டிருந்த திரு டர்ஸிலீயால் சாலையில் பலர் வித்தியாசமாக உடை அணிந்து கூட்டம் கூட்டமாக நின்றுக் கொண்டிருப்பதை பார்க்காமல் இருக்க முடியவில்லை. நீண்ட அங்கி அணிந்த மக்கள். பொருந்தாத வகையில் உடை அணிபவர்களை கண்டால் திரு டர்ஸிலீக்கு எப்போதுமே பிடிக்காது. அதுவும் இந்த கால வாலிபர்கள் ஃபேஷன் என்ற பெயரில் உடை அணிவதைப் பற்றி சொல்லவே வேண்டாம். இதுவும் அது போல் ஒரு ஃபேஷன் தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டார். ஆனால் அந்த கூட்டத்தில் இருந்த எல்லோருமே அடுத்தவருடன் சந்தோஷமாக முனுமுனுத்துக் கொண்டிருந்தது திரு டர்ஸிலீக்கு மிகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அந்த கூட்டத்தில் இருந்த இருவர் வாலிபர்களைப் போல் தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதில் ரத்தின பச்சை நிற அங்கி அணிந்து இருந்த ஒருவர் மிகவும் வயதான கிழவரைப் போல் இருந்தார். என்ன தைரியம் அவருக்கு இது போல் உடை அணிவதற்கு என்று எண்ணிக் கொண்டார் திரு டர்ஸிலீ. ஒரு வேளை பொது சேவைக்கு வசூல் செய்பவர்களாக இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டு, தனது கம்பெனி வந்து சேர்ந்தார்.


திரு. டர்ஸிலீ எப்போதுமே தனது ஆபீஸில் உள்ள ஜன்னல் முதுகுபுறமாக அமைவது போல் தான் உட்காருவார். அன்றும் அது போலவே உட்கார்ந்ததால், வெளியே நல்ல வெளிச்சதில் பறந்த ஆந்தைகளைப் பற்றி தெரியாமல் நிம்மதியாக டிரில்களைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டு காலை வேலைகளில் ஈடுபட்டார். ஆனால், வெளியே இருந்த மக்கள் அனைவருமே ஆந்தைகளின் இந்த வழக்கத்திற்கு மாற்றமான போக்குவரத்தை கவனித்து சுட்டிக்காட்டி அதிசயமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் ஆந்தைகளை இரவிலேயே பார்த்ததில்லை. சிலரோ ஆந்தைகளையேப் பார்த்ததில்லை. ஆனால், திரு டர்ஸிலீக்கு ஆந்தைகள் இல்லா நிம்மதியான காலை அமைந்தது. ஐந்து வெவ்வேறு நபர்களை நன்றாக திட்டினார். தொலைபேசியில் பல ஆர்டர்களை ஏற்றுக் கொண்டார். இன்னும் அதிகமாகவே சத்தம் போட்டார். மொத்ததில் பகல் உணவு வேளைவரையில் நன்றாகவே கழிந்தது. சோர்ந்து போன கால்களை சிறிது நீட்டலாமே என்ற எண்ணத்தில் எதிர் வரிசையிலுள்ள பேக்கரியில் பன் வாங்கி சாப்பிடலாம் என்று நினத்து கிளம்பினார்.

ஆங்கில நாவல்கள் - தமிழில்

நண்பர்களே!

ஆங்கில புத்தகங்களைப் பற்றி வெறும் விமர்சனங்கள் மற்றும் விளக்கங்கள் மட்டும் சொல்வதை விட எனக்கு பிடித்த / நான் படித்த ஆங்கில கதைகளை, ஆங்கிலம் படிக்க முடியாத தமிழ் நண்பர்களும் படிக்கும்படி பகிர்ந்துக் கொள்வது தான் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் Sci-Fi எனப்படும் அறிவியல் புதினங்களும் Fantasy என்று அழைக்கப்படும் மாயாஜால புதினங்களும் தான். அதிலும் Isaac Asimov, Robin Cook, Michael Crichton போன்றோரின் எல்லா நாவல்களும் படித்து விட்டேன். (ஐசாக் அஸிமோவின் எல்லா நாவல்களையும் படிப்பதென்பது கடினம். ஆகவே, சொல்லிக்கொள்ளும்படி படித்து விட்டேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்).

இது போன்ற நாவல்களைப் படிக்கும் போது, தமிழில் ஏன் இது போன்ற நாவல்கள் வருவதில்லை என்று எண்ணி மிகவும் ஆதங்கப்படுவேன். சுஜாதா, ஆர்னிகா நாசர் போன்றோரை விட்டு விட்டால், தமிழில் அறிவியல் புதினங்கள் எழுத ஆட்களே இல்லை. சுஜாதா போன்ற ஜாம்பவான்கள் கூட ஆங்கில நாவலாசிரியர்கள் போன்று விலாவரியாக அனைத்தையும் ஆராய்ச்சி செய்து எழுதியதில்லை. (இந்த கேள்வியை சுஜாதா அவர்களிடமே - ஒரு போஸ்ட் கார்டில் - கேட்டேன். பதில் தான் வரவில்லை)

சுஜாதாவின் திசை கண்டேன் வான் கண்டேன், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்றவகளை இங்கு குறிப்பிடலாம். ஆங்கில நாவல்களில் உள்ள ஆழம் இல்லையென்றாலும், இவைகள் வித்தியாசமான சிந்தனைகள் என்பதை மறுப்பதற்கில்லை.

தமிழ் சினிமாவில் கூட Avatar, Lord Of The Rings, Terminator 2 போன்ற படங்கள் வருவதில்லை. (எந்திரன்? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. ஆனால் உங்கள் மனசாட்சிக்கு உண்மையாக சொல்லுங்கள்.. எந்திரனை ஆங்கில படங்களுடன் ஒப்பிட முடியுமா?).

ஆகவே, இந்த இடைவெளியை நிரப்ப என்னால் புதிதாக எழுத முடியாதென்பதால், அதே ஆங்கில நாவல்களையே தமிழில் மொழிப்பெயர்த்தால் என்ன? என்று எண்ணி துணிந்து இறங்கி விட்டேன். ஓலை சுவடியும் எழுத்தாணியும் வைத்துள்ள தாடி புலவரே கூறியுள்ளார் - “எண்ணி துணிக கருமம் துனிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு”

நான் முன்பே கூறிய படி மயாஜாலங்கள் நிறைந்த “ஃபேண்டசி” வகை கதைகள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதையே தமிழில் மொழிப்பெயர்க்கலாம் என்று எண்ணியுள்ளேன். இந்த பணி மிகவும் கடினமான பணிதான் என்பதும் நீீண்ட காலம் எடுக்கக் கூடிய பணி என்பதும் எனக்கு தெரியும். இருந்தாலும் இது போன்ற கதைகள் தமிழில் வருவதில்லையே என்று ஆதங்கப்படும் சராசரி வாசகனாக நானும் இருப்பதால், ஒரு ஆரம்பமாக இருக்கட்டும் என்று தான் இதை செய்யப் போகிறேன்.

எப்போது ஹாரி பாட்டர் நாவல்கள் படிக்க ஆரம்பித்தேனோ அப்போதிருந்தே எனக்குள் உள்ள ஆதங்கம் என்னவென்றால், இந்த புத்தகங்களை யாராவது தமிழில் மொழிப்பெயர்க்க மாட்டார்களா என்பது தான். இது வரை யாரும் முயற்சி செய்தது போல் தெரியவில்லை. ஆகவே நானே அதனை செய்து விடலாம் என்று எண்ணியே ஆரம்பம் செய்கிறேன். முதல் அத்தியாயத்தை தயார் செய்து வருகிறேன். இன்றோ நாளையோ இணையத்தில் ஏற்றிவிடுவேன். உங்கள் அனைவரின் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நீடுஜாரிஸ்

முன்னுரை!

நண்பர்களே! 

இணையத்தில் பதிவுகள் பதிய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு என்று கூறலாம். ஆனால் இது வரை கவனம் செலுத்தாமலே இருந்து விட்டேன். சிறு வயது முதலே புத்தகங்கள் படிப்பதில் மிகவும் ஆர்வமுடன் அலைந்தவன் நான். இன்றும் அது தொடருகிறது. நான் படித்த / படிக்கும் சில ஆங்கில புத்தகங்களை சக தமிழர்களுக்கும் புரியும்படி பரப்ப வேண்டும் என்ற ஆவலில் இந்த வலைப்பூவை தொடங்குகிறேன். தங்கள் மேலான ஆதரவை என்றென்றும் விரும்பும்.......


நீடுஜாரிஸ்